19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் கொழும்பில் 5 ஆம் திகதி ஆரம்பம்..!

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்த ஆசிய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடராக நடத்தப்படும் ஆசிய கிண்ணத் தொடரின் குழு ஏயில் நடப்புச் சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், குவைத் ஆகியனவும், குழு பியில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியனவும் இடம்பிடித்துள்ளன.இப்போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளிலுள்ள மைதானங்களில் நடத்தப்படவுள்ளன. இப்போட்டித தொடரின் லீக் சுற்றில் தத்தமது குழுக்களில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். அரை இறுதிப் போட்டியில் வெற்றியீட்டும் இரண்டு அணிகளும் 14 ஆம் திகதியன்று நடைபெறும் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும்.

இதுவரை, 7 தடவைகள் நடைபெற்றுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண வரலாற்றில் இந்தியா 5 தடவைகள் சம்பியனாகவும், ஒரு தடவை பாகிஸ்தானுடன் இணைச்சம்பியனாகவும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 2017 இல் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, ஆப்காகிஸ்தான் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.இலங்கை 4 தடவைகள் (1989, 2003 ,2016, 2018) உப சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், பாகிஸ்தான் ஒரு தடவை இந்தியாவுடன் (2012 இல்) இணைச்சம்பியனானதுடன், இரண்டு தடவைகள் (2013, 2017) உப சம்பியனாகியுள்ளது. இதன்படி இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளைத் தவிர 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண சம்பியனாக முடிசூடியதில்லை.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் மாகாண மட்டப் போட்டிகளில் சிறந்த ஆற்றல், திறமைகளை வெளிக்காட்டிய 15 பேரை ஹஷான் திலகரட்ண தலைமையிலான இலங்கை 19 வயதுக்குட்பட்ட தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு நிப்புன் தனஞ்சய அணித்தலைவராவும், கமில் மிஷார உப அணித்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட குழாம்:நிப்புன் தனஞ்சய (அணித்தலைவர்), கமில் மிஷார (உப அணித்தலைவர்), நவோத் பரணவித்தான, தவீஷ அபிஷேக், ரவிந்து டிஷன்த்த, அஹான் விக்கிரமசிங்க, அவிஷ்க தரிந்து, ரொஹான் சஞ்சய, அஷியான் டேனியல், சந்துன் மெண்டிஸ், கவிந்து நதீஷான், யசிரு ரொட்றிகோ, டில்ஷான், மதுஷங்க, சமிந்து விஜேசிங்க, அம்ஷி டி சில்வா.

தயார் நிலை வீரர்கள்:சமிந்த விக்கிரமசிங்க, திலும் சுதீர,சொனால் தினூஷ, சிஹான் கலிந்து.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்