சொதப்பிய இலங்கை வீரர்கள்… இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்திற்கு இன்னிங்ஸ் வெற்றி…!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தியுள்ளது.கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில் 22ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்களை பெற்றது.இதன்போது, இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக தனஞ்சய டி சில்வா 109 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சு சார்பில், டிம் சவுத்தீ 4 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், கொலின் டி கிராண்ட் ஹோம், வில்லியம் மோமர்வில்லே மற்றும் அஜாஸ் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 431 ஓட்டங்களை பெற்றிருந்த போது, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.இதன்போது அணியின் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக டொம் லதம் 154 ஓட்டங்களையும், வாட்லிங் ஆட்டமிழக்காது 105 ஓட்டங்களையும், கொலின் டி கிராண்ட்ஹோமி 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பில், தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். 187 ஓட்டங்கள் பின்னிலையில், தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, போட்டியின் இறுதிநாளான இன்று போட்டியை சமநிலை செய்யும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கியது.எனினும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை கிரிக்கெட் அணி, 122 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.இந்த வெற்றியின் மூலம், ஆசிய நாடு அல்லாத நாடடொன்று இலங்கை மண்ணில், இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.இதற்கு முன்னதாக 1993ஆம் ஆண்டு கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தென்னாபிரிக்கா அணி, 208 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இதில் இலங்கை அணி சார்பில், அதிகபட்ச ஓட்டமாக நிரோஷன் டிக்வெல்ல 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில், ட்ரென்ட் போல்ட், டிம் சவுத்தீ, அஜாஸ் பட்டேல் மற்றும் வில்லியம் சோமர் வில்லே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கொலின் டி கிராண்ட்ஹோமி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதன்போது 2 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சவுத்தீ, டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது நியூஸிஸாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக நியூஸிலாந்து அணி சார்பில், 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட டொம் லதம் தெரிவுசெய்யப்பட்டார்.27 வயதான டொம் லதம் இறுதியாக விளையாடிய தனது எட்டு இன்னிங்சுகளில் நான்கு தடவைகள் 150 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்