மகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்புக்கள்…

ஆடி மாதம் மகத்துவம் வாய்ந்த அம்மன் மாதம் என்று அழைக்கப்படுவதுண்டு.ஆடி மாசத்தில் நல்ல விடயம் எதுவுமே செய்யக் கூடாதென்கிற மூட நம்பிக்கை பரவலாக இருக்கின்றது. ஆடி மாதத்தில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.வருடத்தின் அனைத்து மாதங்களுமே வழிபாட்டிற்கு உரிய மாதங்கள் தான் என்றாலும், இந்த ஆடி மாதத்தை அம்மனின் மாதமாக கொண்டாடுகின்றோம்.ஆடி மாதம் தனி சிறப்பு பெற்ற மாதமாக இருப்பதால்தான் அம்மனுக்கு உகந்த மாதமாக அமைந்துள்ளது. ஆடி மாதத்தை பீடை மாதம் என்றும் சிலர் அழைக்கின்றனர்.  உண்மையில் பீடு மாதம் அதாவது பீடு என்றால் பெருமை உடைய என்று அர்த்தம். அதனாலேயே அதை ஆன்மிக மாதமாக கொண்டாடுகின்றோம்.ஆடி மாதத்தில்தான் பருவநிலை மாறுதல் அடைந்து புதியதாக காற்றும், மழையும் ஆரம்பமாகின்றது. காற்றில் ஒக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும் மாதமும் ஆடி மாதம்தான். இதனால் தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விதைக்கும் பருவமாக கொண்டாடுகின்றோம்.ஆடியில் விதைத்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம். தை மாதம் அறுவடை செய்து புது பொங்கல் பொங்குவதற்கான உழைப்பின் ஆரம்பம்தான் ஆடி மாதமாகும்.பருவநிலை மாறுவதால் தொற்று நோய்கள், உடல் ஆரோக்கிய சீர்கேடு ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். அம்மன் கோயில்கள் வேப்பிலையும், எலுமிச்சையும் வைத்து வழிபாடு செய்வர். வேம்பு, எலுமிச்சை இரண்டுமே கிருமி நாசினி. கூழ் வார்க்கும் வழக்கமும் ஆடிமாதத்தில்தான் காணப்படுகின்றது.செரிப்பதற்கு எளிய உணவு பொருளாகவும், குளிர் காற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் உணவாகவும் கூழ், நம் உடல் நலத்தை சீராக்குகிறது.

சிறப்புகள் அதிர்ஷ்டம் இல்லாததாகவும், நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்புடையதாக இல்லாததாகவும் கருதப் படுகின்ற ஆடி மாதத்தில்தான் ஆண்டாள் அவதரித்தார்.அவர் அவதரித்த பூரம் நட்சத்திரத்தைத் தான் ‘ஆடிப் பூரம்’ என்று கொண்டாடுகின்றோம். விவசாயம் செழித்தோங்க காவிரி தாய்க்கு ஆடிப்பெருக்கு விழா எடுக்கின்றோம்.கருடாழ்வார் அவதரித்ததும் இப்படி பெருமைகள் வாய்ந்த ஒரு ஆடி மாதத்தின் பஞ்சமியிலாகும். அதைத்தான் ‘கருட பஞ்சமி’ என்று கொண்டாடுகின்றோம். சிவபெருமானின் இடது பாகத்தை விஷ்ணு ஏற்று சங்கர நாராயணராக காட்சியளித்த ஆடி தபசு இந்த மாதத்தில் தானே கொண்டாடப்படுகின்றது. கஜேந்திர மோட்சம் கிடைத்த மாதமும் ஆடி மாதம்தான்.கல்வி கடவுளான ஹயக்கிரீவர் அவதரித்த மாதமும் ஆடி மாதம்தான். வியாச வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக ஆடி பௌர்ணமி இருக்கின்றது.இறந்த நம் குடும்ப முன்னோர்களை வழிபடுவதற்கு சூரியன் திசைதிரும்பும் இந்த ஆடி மாதத்தின் அமாவாசை நாள் உகந்த நாளாக இருக்கின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்