வெறும் 200 ரூபா கடனை திருப்பிக் கொடுக்க 30 வருடங்களின் பின் ஆபிரிக்க தேசத்திலிருந்து வந்த நன்றி மறவாத பாராளுமன்ற எம்.பி..!!

கோடிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பும் தொழிலதிபர்கள் ஒரு பக்கம் இருக்க, முப்பது வருடத்துக்கு முன் வாங்கிய 200 ரூபாய் கடனை அடைக்க, இந்தியா வந்த கென்ய எம்பி. நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்!கென்ய நாட்டின் நியாரிபரி சாச்சே (Nyaribari Chache) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சார்ட் டோங்கி (Richard Tongi). இவர், 1985-89 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் கல்லூரியில், மேலாண்மை படிப்பு படித்தார். அப்போது, வாங்கடே நகரில் மளிகைக்கடை வைத்திருந்த காசிநாத் காவ்லியிடம் நட்பானார்.அவர்தான் ரிச்சர்ட் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்தது உட்பட பல உதவிகளை செய்தார். அவர் கடையில் ரூ.200-க்கு காய்கறிகள், கடனாக வாங்கியிருந்தார் ரிச்சர்ட். கஷ்டமாக இருந்ததால் அப்போது அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை ரிச்சர்டால். படிப்பு முடிந்ததும் அந்தக் கடனை கொடுக்காமலேயே, சொந்த நாடுக்கு திரும்பி விட்டார் . அங்கு அரசியலில் முன்னேறி, இப்போது நாடாளுமன்ற உறுப்பினர். வசதியான வாழ்க்கையும் வந்துவிட்டது.இருந்தாலும் தான் படித்துக் கொண்டிருந்தபோது, காவ்லிக்குக் கொடுக்க வேண்டிய ரூ.200 கடன், அவரை ஏதோ செய்துகொண்டிருந்தது. அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் அமையவில் லை.இந்நிலையில் 30 வருடத்துக்குப் பிறகு, இப்போது வாய்ப்பு வந்தது. கென்ய பிரதிநிதிகள் குழு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இந்தியா வந்தது. அதில் கென்ய அரசின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை துணைத் தலைவராக இருக்கும் ரிச்சர்டும் இடம்பெற்றிருந்தார். அரசு ரீதியான கூட்டம் முடிந்ததும் தனது மனைவி மிட்செலுடன் அவுரங்கா பாத்துக்குப் பறந்தார். அப்போது ’காசிநாத் காக்கா’ என்றழைக்கப்பட்ட காவ்லியை தேடினார். இரண்டு நாட்களாகத் தேடி, கடைசியில் திங்கட்கிழமைக் கண்டுபிடித்தார். அவர் முன்னால் போய் நின்று, ’’நான்தான் ரிச்சர்ட் டோங்கி’’ என்று மகிழ்ச்சி யுடன் சொன்னதும் 70 வயதான காவ்லிக்கு ஒன்றும் புரியவில்லை. ’உங்ககிட்ட 200 ரூபாய் கடனை வச்சுட்டு போனேனே, அந்த டோங்கி’ என்றதும் கண்கலங்கி விட்டார் காவ்லி. இருவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். அவர் வீட்டில், பழைய நண்பருக்கு தடல் புடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.பின்னர், முப்பது வருடமாகத் தன்னை துன்புறுத்திக்கொண்டிருந்த ரூ.200 கடனை கொடுத்தார். வாங்கிக்கொள்ள மறுத்தார் காவ்லி. ஆனால், அவர் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்குப் பரிசாக சில யூரோக்களை கொடுத்தார் டோங்கி.
இதுபற்றி காவ்லி கூறும்போது, ‘’அவர், நான் தான் ரிச்சர்ட் டோங்கி என்று சொன்னதும் எனக்கு முதலில் யாரென்று தெரிய வில்லை. அவர் அந்த 200 ரூபாய் பற்றி சொன்னதும் கண்ணீர் வந்துவிட்டது. அவர் நேர்மை என்னை ஈர்த்தது’’ என்கிறார்.”இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்’’ என்று கண்ணீருடன் கூறிய ரிச்சர்ட் டோங்கி, சிறிது நேரத்துக்குப் பிறகு, ‘’அவர் எனக்கு அதிகமான உதவிகளை செய்திருக்கிறார். அவர் கடனை அடைக்க வேண்டும் நினைத்துக்கொண்டே இருந்தேன். அவரைச் சந்திப்பேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.நேர்மையாக இருக்க, இந்தியர்கள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை ஒப்புக்கொள்வேன்’’ என்கிறார்.அவர் மனைவி மிச்செல் கூறும்போது, ‘’டோங்கி, பலமுறை காவ்லி பற்றி எங்கள் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார். இப்போது அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியாவில் இவரை போன்ற பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.டோங்கிக்கு பாரம்பரிய தொப்பியையும் அவர் மனைவுக்கு சேலைகளையும் வாங்கிக் கொடுத்து நெகிழ்ச்சியுடன் நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது காவ்லி குடும்பம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்