உயிரிழந்த இரு வெளிநாட்டவர்களின் சடலங்களுடன் திருமலைத்துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்…!

உயிரிழந்த இரு வெளிநாட்டவர்களுடன் கப்பலொன்று திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரான்ஸ் நாட்டிலிருந்து 4 ஆயிரம் மெற்றிக் தொன் காஸ் (வாயு ) தாங்கிய நிலையில் இந்தியாவுக்கு லைபீரிய கொடியுடன் சென்ற GAS AEGEAN என்ற கப்பலில் இருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இறந்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது ;

கப்பல் இலங்கையின் தென்பகுதியில் காலி கடற்பரப்பில் பயணித்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில், திருகோணமலை துறைமுகத்திற்கு மேற்படி கப்பல் இறந்த இரு வெளிநாட்டவர்களின் உடல்களுடனும் வந்தடைந்துள்ளது.இரு வெளிநாட்டவர்களும் கடந்த 8 ஆம் திகதி இறந்துள்ளபோதிலும், அவர்களின் உடல்களை கப்பலில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அங்கிருந்தவர்கள் பாதுகாத்து எடுத்துவந்துள்ளனர்.காலி கடற்பரப்பில் வைத்து சம்பவம் இடம்பெற்ற போதிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களில் தரித்து நின்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதிகள் இல்லாத நிலையில் திருகோணமலை துறைமுகத்தை கப்பல் சென்றடைந்துள்ளது.இருவரும் இறந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராத போதிலும் விசாரணைகள் பலகோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.உயிரிழந்தவர்களில் ஒருவர் காஸ் பொறியியலாளரான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 34 வயதுடையவரெனவும் மற்றையவர் 39 வயதுடைய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கப்பலின் 2 ஆவது நிலை இயந்திரவியலாளர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் துதூவராலயங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார், துறைமுக அதிகார சபையினர், சுங்க திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படையினர், மரணவிசாரணை அதிகாரிகள் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்