சீரடி சாயிபாபாவின் வார்த்தைகளுக்குள் வசப்படாத மகத்துவம்..!

சீரடி சாய்பாபாவின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளாலோ அல்லது எழுத்துக்களாலோ சிறப்பாக சொல்லி விட முடியும் என்று தோன்றவில்லை . கடலை கைகளால் அள்ளி விட முடியுமா? ஆம், அப்படி ஒரு மகத்தான உணர்வு தான் சாய் பாபாவின் சரிதத்தை சொல்லுவது . எங்கும் நிறை பேரறிவான அவரின் அருகாமையை அவரின் பக்தர்களால் மட்டுமே நன்றாக உணர முடியும் .சாய் பாபாவின் கருணை வெளிச்சம் ஒருவர் மீது பட்டால் மட்டுமே அவரை மனத்தால் வரிக்கவோ அல்லது அவரின் நாமத்தை ஜெபித்திடவோ முடியும். பூர்வ ஜென்ம புண்ணிய பலன் காரணமாக மட்டுமே சாயி நாமத்தை ஒருவரால் சொல்ல முடியும் . அவரைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு கடினமானதா என்ன …..? இல்லை , அதற்காக கடின யோகா பயிற்சியோ , மூச்சை அடக்கும் வித்தையையோ தெரிந்திருக்க வேண்டாம் . அவரிடம் பொறுமையும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதும் . அவருக்காக பொறுமையோடு காத்திருந்தவர்கள் தங்கள் வாழ் நாளில் பெற்ற புண்ணியங்கள் ஏராளம். அது இந்த பிறவிக்கும் இனி தொடர இருக்கும் ஏழேழு பிறவிக்குமான பலன்கள் தரும் . நம்பிக்கையோடு அவர் முன் நம் தலை தாழ்ந்தால் ,இந்த ஜென்மம் ஈடேற சாயி நமக்கு துணையாக நிற்பார் என்பதில் ஏதேனும் ஐயம் இருக்க முடியுமா ?

பாபாவின் யோக நிலை-  பாபாவின் தெய்வீக தன்மையை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்கள் ஆனார்கள் . சத்குருவான பாபா மக்கள் மனதில் தெய்வமாகவும் , குருவாகவும் உயர்ந்து நின்றார் . இருப்பினும் அவர் சமாதி நிலை அடையும் வரை ஒரு யோகியைப் போலவே தான் வாழ்ந்து வந்தார் . அன்றாடம் தனது உணவுக்காக பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார். அவரது பாதம் பட்ட தெருக்கள் புண்ணியம் செய்தன . அவருக்கு உணவளித்த பெண்கள் மகா பாக்கியசாலிகள் . உலகிற்கே தனது கருணையால் பசிப்பிணியை போக்கும் அந்த மகானின் குரல் கேட்டு அன்னம் அளித்த அன்னையர்கள் ஆசீர்வசிக்கப் பட்டவர்கள் அல்லவா . தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபா பசியோடு தன்னை நாடி வந்தவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பியதே இல்லை . எத்தனை பக்தர்கள் தன்னை நாடி வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா. இதனால் அந்த கருணாமூர்தியை தேடி தாய்ப் பசுவை தேடி செல்லும் கன்றுக்களை போல் மக்கள் சீரடியை நோக்கி வரத் தொடங்கினர் .

பாபாவிற்கு பகவத் கீதையும் தெரியும் …குர்ஆனில் சொல்லப்பட்ட போதனைகளையும் அறிவார் . இரண்டிலும் உள்ள சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து தேர்ந்த பண்டிதர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் . பாபாவிற்கு எம்மதமும் சம்மதம் .பாபா தான் எப்போது தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம் . அந்த விளக்குகளுக்கான எண்ணையை அந்த ஊர் இருந்த இரண்டு எண்ணெய் வியாபாரிகள் கொடுத்து வந்தனர். ஒருநாள் பாபாவின் சக்தியை சோதிக்க நினைத்த அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.அன்று பாபா எவ்வாறு விளக்குகளை ஏற்றப் போகிறார் என்று பார்க்க மசூதிக்கு சென்ற அவர்கள் ஒளிந்துகொண்டு பார்த்தார்கள் . பாபா விளக்குகளில் தண்ணீரை விட்டு திரி போட்டு ஏற்றுவதைப் பார்த்த அவர்கள் வெட்கி தலை குனிந்தார்கள் . பாபா நிகழ்த்திய இந்த அற்புதத்தால் அவர் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. தினந்தோறும் அவரின் அற்புதங்களைக் காண அந்த சீரடி கிராமம் தயாரானது.-

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்