400 கி.மீ வேகத்தில் காற்றைக் கிழிக்கும் அதிவேக ரயில்…!! ஜப்பானில் சோதனைப் பயணம் ஆரம்பம்…!!

உலகின் அதிவேக புல்லட் ரயிலான ‘ஆல்ஃபா எக்ஸ்’ ரயிலின் சோதனை ஓட்டம் ஜப்பானில் துவங்கப்பட்டுள்ளது.தற்போது அங்கு இயக்கப்படும் சிங்கன்சென் புல்லட் ரயிலின் அடிப்படையில்தான் இந்த புதிய புல்லட் ரயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய புல்லட் ரயில் ஆல்ஃபா எக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்த இந்த புதிய புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று துவங்கப்பட்டுள்ளது. சீனாவின் ஃபியூஜிங் புல்லட் ரயிலைவிட 10 கிமீ கூடுதல் வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருக்கிறது.இந்த புதிய புல்லட் ரயில் சோதனை ஓட்டங்கள் முடிந்து வரும் 2030ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மணிக்கு 360 கிமீ வேகத்தில் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே, மாக்லெவ் என்ற ரயிலை ஜப்பான் சோதித்து பார்த்தது நினைவிருக்கலாம். சக்கரங்கள் இல்லாமல் காந்தவிசை மூலமாக தண்டவாளத்தில் சில மிமீ இடைவெளியில் செல்லும் திறன் படைத்த மாக்லேவ் ரயில் மணிக்கு 600 கிமீ வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகருக்கும் மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பைக்கும் இடையே அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு இருநாடுகளின் பிரதமர்கள் முன்னிலையில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.தேசிய அதிவேக ரயில் கழகம் லிமிடெட் செயல்படுத்தும் இந்த திட்டத்திற்கான மொத்த செலவில் 88 ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் நிறுவனமும், மீதமுள்ள 22 ஆயிரம் கோடி ரூபாயை குஜராத், மகாராஷ்டிர மாநில அரசுகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களின் தொடர் போராட்டம் மற்றும் திட்டத்தில் உள்ள பல்வேறு சிக்கல்களால், பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில், சீனாவும், ஜப்பானும் போட்டி, போட்டுக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்