சம்மாந்துறையில் ஏற்படவிருந்த பேராபத்தை காட்டிக் கொடுத்த இஸ்லாமியர்கள்…!!

அப்பாவிகளை அழிப்பதன் மூலம் சொர்க்கத்திற்குப் போகலாம் என எந்த மதத்திலாவது கூறியிருந்தால் அதனை பகுத்தறிவுள்ள ஒருவரின் கருத்தாக நாங்கள் ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் ஸ்ரீ மாவடி பிள்ளையார் ஆலய சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறும் போது;

சோசலிச தன்மையான அரசினை உருவாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியினர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.பின்பு தமிழீழ விடுதலைப் புலிகள், போராட்டத்தின் மூலமாக இலட்சியத்தை அடைய வேண்டும் எமது மக்கள் வடக்கு கிழக்கில் உரிமையுடன் வாழ வேண்டும் என்ற ரீதியில் பேராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.ஆனால், தற்போது உருவாகியுள்ள தீவிரவாத போராட்டத்தை இஸ்லாமிய தலைவர்கள் கூட பயங்கரவாதம் என வெளிப்படையாக கூறுகிறார்கள்.இது கூண்டோடு அழிக்கப்பட வேண்டும் என இஸ்லாமிய மார்க்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள். சம்மாந்துறையில் நடைபெறவிருந்த ஆபத்தினை இஸ்லாமிய மக்களே காட்டிக் கொடுத்து தடுத்துள்ளார்கள்.அப்பாவிகளை அழிப்பதன் மூலம் சொர்க்கத்திற்கு போகலாம் என எந்த மதத்திலாவது கூறியிருந்தால் அதனை பகுத்தறிவுள்ள ஒருவரின் கருத்தாக நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.மட்டக்களப்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் 30 பேர்வரையில் உயிரிழந்துள்ளார்கள். அதனை இதன மத பேதமின்றி அனைவருமே இந்த செயலைக் கண்டித்திருக்கிறார்கள்.

இப்படியான பயங்கரவாதத்தினை அழிப்பதற்கு நாங்களும் பக்க பலமாக இருப்போம் என இஸ்லாமிய தலைவர்களும் கூறியிருப்பது மக்களுக்கு ஆறுதலளிக்கிறது.பல்லின சமூகங்கள் வாழுகின்ற இந்த நாட்டிலே அப்பாவி மக்களின் உயிர்களை எடுக்குமாறு எந்தவொரு மதமும் கூறவில்லை.ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தாமல் யார் யார் தவறுகளை விடுகின்றார்களோ அவர்களை கண்டுபிடித்து இனிமேல் தவறுகள் நடைபெறாமல் செயற்படுபவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்.வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்காக பாதுகாப்பு தரப்பினருடன் வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்கள்.இந்த கைது சம்பவம் தொடர்பாக எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என நாடாளுமன்றத்திலும் பேசியிருந்தோம்.பொலிஸாரை கொலை செய்தது முன்னாள் போராளிகள் அல்ல, கொலையாளிகள் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினர் என எங்களது சந்தேகத்திற்கு ஐந்து மாதங்களின் பின் விடை கிடைத்துள்ளது.

பாதுகாப்பு தரப்பினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் இந்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்திருந்தால் 21ஆம் திகதி நடைபெற்ற பேரழிவைத் தடுத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்