இலங்கையிலுள்ள பாடசாலைகளை ஆறாம் திகதி ஆரம்பிப்பதிலுள்ள சவால்களும் சாத்தியங்களும்…!

இரண்டாம் தவணைக்காக மூடப்பட்ட பாடசாலைகளை எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை கல்வி அமைச்சும் ஜனாதிபதியும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.இத்தீர்மானம் பாதிப்படைந்த இயல்பு வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பாடசாலைகளுக்காக பாதுகாப்பு ஒழுங்குகள் குறித்து கல்வி அமைச்சு இரு திட்டங்களை அறிவித்துள்ளது. பாடசாலை சமூகம் மாணவர்களின் பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளுவதோடு அதற்கு ஒத்துழைப்பாக பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவர்.

ஒரு பாடசாலைக்கு ஆகக் குறைந்தது ஒரு பொலிஸ் அதிகாரியையேனும் கடமையில் ஈடுபடுத்துவதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.எனினும், மத்திய மாகாண பாசடாலைகளின் அதிபர்களுக்கும் மாகாண ஆளுனருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் நேற்று (2.5.2019) நடைபெற்ற கலந்துரையாடலில் அதிபர்கள் தற்போதைய நிலைமையில் பாடசாலையை ஆரம்பிப்பதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அவர்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், மாணவர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் பாடசாலைகளுக்குள் பிற இன மாணவர்களுடன் முறுகல்கள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அத்தோடு பாடசாலை வளாகத்தையும் சுற்றுப் புறத்தையும் தொடர்ந்தும் பரிசோதிப்பதில் உள்ள சவால்களையும் எடுத்துக் காட்டினர்.பாதுகாப்புத் தரப்பினரும் இந்த சவால்மிக்க நிலையை ஏற்றுக் கொண்டனர்.

இதற்கு பதிலளித்த மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்ன, இன்று ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அதிபர்களின் கருத்துக்களை முன்வைத்து அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார். ஆளுனரும் இத்தகைய சவாலை ஏற்றுக் கொண்டார்.இதற்கிடையில் மேல்மாகாணத்தில் காணப்படும் கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை திறக்க வேண்டாம் என காதினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.குறிப்பான காரணங்கள் எதனையும் அவர் குறிப்பிடாத போதிலும் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் நேற்றைய முன் தினம் வெளியிட்டுள்ள அறிக்கை இதற்கான காரணமாக இருக்கலாம் என பலரும் ஊகிக்கின்றனர்.அவ்வறிக்கையில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடரக்கூடும் என உளவுத் துறைத் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

எனவே, பாடசாலைகளை திறந்ததன் பின்னர் ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் சன நெரிசலில் ஏற்படும் சிறு அசம்பாவிதமும் கூட ஆபத்தானது என்றும் சில நேரங்களில் வதந்திகள் கூட அவ்வாறான அசம்பாவிதங்களைத் தோற்றுவிக்கும் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.இதற்கிடையில் எதிர்வரும் ஞாயிறன்று இடம் பெற விருந்த தேவாலய ஆராதனைகளையும் காதினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் ரத்துச் செய்துள்ளமை இந்நிலைமையின் தன்மையை விளங்கிக் கொள்வதற்கு போதுமானதாக அமையக் கூடும்.எனினும், இன்றைய தினம் அரச உயர் நிர்வாக அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெறும் கலந்துரையாடல்களின் பின்னர் இது தொடர்பான தீர்மானங்களில் மாற்றங்கள் இடம்பெற சந்தர்ப்பம் உள்ளது.அரசாங்கம் 6 ஆம் திகதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடசாலையை ஆரம்பிக்காது தரம் 6க்கு மேல் ஆரம்பிப்பது பொருத்தமான தீர்வாக அமையும்.

ஏனெனில், அரசாங்கம் மக்களின் இயல்பு வாழ்வை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான தேவையை கவனம் செலுத்துகிறது. அதனை இதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம். அத்தோடு பாடசாலை ஆரம்பமாவதால் ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் சன நெரிசல் ஆகியவற்றை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.குறிப்பாக ஆரம்ப வகுப்பு மாணவர்களை பெரும்பாலும் பெற்றோரே பாடசாலைகளுக்கு அழைத்து வந்து அவர்களை மீண்டும் கூட்டிச் செல்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் இதனை முன்பை விட கரிசனையோடு பெற்றோர் மேற்கொள்வர். எனவே, இதன் காரணமாக வாகன நெரிசலும் சன நெரிசலும் கட்டுக்கடங்காமல் செல்லக்கூடும். குறிப்பாக அதிக பாடசாலைகள் காணப்படும் நகர்களில் இந்நிலை அதிகரிக்கக் கூடும்.

அத்தோடு ஏதேனும் அசம்பாவிதங்கள் தொடர்பான செய்திகள் பரவும் போது நிதானமாக சுயமாக ஏதாவது ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டினுள் இயங்குவதற்கு வயது குறைந்த மாணவர்கள் சிரமப்படுவர். வயது கூடிய மாணவர்கள் நிலைமைகளுக்கு ஏற்ப தம்மை இயக்குவதற்கான ஆற்றலைக் கொண்டிருப்பர்.எனவே, அரசாங்கம் கட்டாயமாக 6 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட, தரம் 1-5 வரையான மாணவர்களுக்கு வகுப்புக்களை ஆரம்பிப்பததை இன்னும் சில வாரங்களுக்கு பிற்போடுவதே அறிவார்ந்த தீர்மானமாக அமையும் என்பது நம்பிக்கை.அல்லது அனைத்து வகுப்புக்களையும் இன்னும் ஒரு வார காலம் கடந்து ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்க முடியுமாயின் அத்தீர்மானம் எல்லாவகையிலும் சிறந்த தீர்மானமாக அமையும் என்பது எமது நம்பிக்கை.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்