நான்கு ஆண்டுகள் கட்டிக் காத்த தேசிய நல்லிணக்கத்தை சிதைத்த ஐ.எஸ் தீவிரவாதிகள்..!! சந்திரிக்கா ஆவேசம்..!

கடந்த 04 வருடங்களாக கட்டிக்காத்துவந்த இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சிதைத்துவிட்டதாக தேசிய நல்லிணக்க செயலணி தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.இருந்த போதிலும் வீழ்ந்து போயிருக்கும் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான பணிகளை மீண்டும் அடுத்தவாரத்திலிருந்து ஆரம்பிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலினால் பலர் உயிரிழந்துள்ளதுடன், இன்னும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களை அடுத்து தமிழர் தாயகம் உட்பட ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் சோதனை நடவடிக்கைகளை நடத்திவருகின்றனர்.இதன் காரணமாக தலைநகரான கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மக்களின் அன்றாட செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, தொடர்ந்தும் அச்ச நிலையிலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய நல்லிணக்க செயலணியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று மாலை கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக இதன்போது தனது கவலையை வெளிப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கர்தினாலுடன் பேசினார்.இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது;

‘இடம்பெற்ற சம்பவம் மிகவும் கவலைக்குரியதாகும். இது இடம்பெற்றிருக்கக் கூடாது. எப்படியாவது மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 04 வருடங்களாக அரசாங்கத்தின் பங்களிப்பிலும், எனது தலைமையின் கீழ் உள்ள நல்லிணக்கச் செயலணி ஊடாகவும் உருவாக்கிவந்த இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமானது வீழ்ந்து போயுள்ளது.இருந்தாலும், நாங்கள் மீண்டும் அந்தப் பணிகளை ஆரம்பிப்போம். ஸ்ரீலங்காவின் அனைத்து பிரதேச செயலக எல்லைகளிலும் சமாதானக் குழுக்கள் அமைத்து அதில் அனைத்துமத தலைவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், சிவில் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளை இணைத்து செயற்படவுள்ளோம். பெயரளவில் இவை இப்போது இருந்தாலும் இருக்கின்ற அனைத்து குழுக்களையும் ஓரிணைத்து அடுத்த வாரத்திலிருந்து பணிகளை ஆரம்பிக்கவிருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்