அதிர வைக்கும் சவூதி அரேபியா….! ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை!!

சவூதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட இவர்கள் அனைவரும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.இந்த தண்டனை குறித்து தெரிவித்துள்ள சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவருமே தீவிரவாதத்தில் ஊறிப்போனவர்கள். நாட்டில் வகுப்புவாத கொள்கைகளை பரப்பி வன்முறைகளில் ஈடுபட்டு வந்தனர்.இவர்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி நாட்டுக்கு பல இன்னல்களை ஏற்படுத்தியவர்கள். இந்த தாக்குதலில் பல்வேறு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குவாசிம் மற்றும் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கிழக்கு மாநிலங்கள், மற்றும் ரியாத், மெக்கா, மெதினா மற்றும் அசிர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் நாட்டுக்கு எதிரான அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

நாட்டின் நலனுக்கு எதிரான பல்வேறு குற்றசெயல்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.இந்த கொடுங்குற்றவாளிகள் அனைவர் மீதான குற்றங்களை விசாரிக்க சிறப்பு குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. அந்த நீதிமன்றங்களில் நடந்த விசாரணையின் அடிப்படையிலேயே இவர்களுக்கு இப்போது மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகவே இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுதான் வழக்கம். ஆனால் நேற்று நிறைவேற்றப்பட்ட தண்டனையில் இருவரின் உடல்கள் மட்டும் தலை கீழாக பொதுமக்கள் கூடும் இடத்தில் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.

கம்பத்தில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த இருவரின் உடல்கள் மட்டும் பல மணி நேரங்கள் அப்படியே இருந்தன. இது குறித்து விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம் இப்படி பல மணி நேரங்கள் கட்டி தொங்க விடப்பட்டால் மட்டுமே இது போன்ற குற்றங்களை செய்வதற்கு பயம் வரும் என்று தெரிவித்துள்ளது.

இப்படி இருவரின் உடல்கள் கம்பத்தில் தொங்கவிடப்பட்டு இருந்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் ஒரே நேரத்தில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்