பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை நெறிமுறைகள்!

மனித மனம் ஆழ்கடல் போன்றது. இதில் அமைதி என்பது சில நாட்கள் நீடித்தாலும், கரையை தொட்டுச் செல்லும் அலைபோல் சில பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன.

இன்பம் எனும் சொர்க்க வாசலில் பயணிப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே என்றால் அது மிகையாகாது. ஏனெனில் இந்த வாழ்க்கை ஆழ்கடல் பயணமல்லவா? அதில் துன்பமும், இன்பமும் மாறிமாறி வந்தால்தான் பயணம் இனிமையாக அமையும். வாழ்க்கையும் பூர்த்தியாகிறது.

இந்த வாழ்க்கை பற்றி வேதங்களும் புராணங்களும் பல விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தாலும், அதன் உண்மைத்தன்மையை பகவத்கீதையைவிட வேறொன்று சிறப்பாக கூறிவிடமுடியாது என்பதே எண்ணப்பாடு. வாழ்க்கை பற்றி பகவத் கீதை கூறும்போது, வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் அது நிலா போன்றது என்றும் அதில் வளர்பிறை தேய்பிறை என அனைத்தும் இருக்கும் என்றும், ஒருநாள் அது மறைந்தே போகும் என்றும் கூறியுள்ளது. மனிதன் இவ்வுலகில் பிறந்தது முதல் அவன் இறக்கும்வரை அனுபவிக்கும் அத்தனை விடயங்களையும் தெளிவுபடுத்துகிறது.

அவ்வாறே மனித மனம் இலகுவில் அன்புக்கு அடிமையாவதும் அது பொய்யென அறியும்போது துவண்டுவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. உங்கள் அன்பு எங்கு நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை.

நிராகரித்தவருக்கே இழப்பு. உலகில் தன்னைப் போலவே பிறரையும் நேசிக்க தெரிந்தவர் இருப்பார் என்றால் அவர் கடவுள் மட்டுமே. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நினைக்கும்போது “ஒன்றை மறவாதீர்கள் எதிர்காலம் ஒன்று உள்ளது” என கூறுவதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தம் புலப்படுகிறது.

வெற்றி இல்லாத வாழ்க்கை இல்லை. ஆனால் வெற்றி மட்டுமே வாழ்க்கை அல்ல. ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை என வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை பகவத் கீதை அழகாக சித்தரிக்கின்றது.

இவ்வாறே உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அடுத்தவர் மீது கோபம் கொள்ளாதே, மகான் போல் வாழவேண்டும் என்று அவசியமில்லை. மனசாட்சிபோல் வாழ்ந்து காட்டுங்கள். நம்மைப்பற்றி யார் என்ன நினைத்தால் நமக்கென்ன… நம்மை பற்றி நாம் அறியாததையா மற்றவர்கள் அறிந்துவிடப்போகிறார்கள் என்பதன் மூலம் வாழ்க்கையை சீர்படுத்தும் வழிமுறைகளை குறிப்பிடுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்