கேட்டது 1000ரூபா சம்பளம்! கொடுத்தது வெறும் 20ரூபா அதிகரிப்பு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தினூடாக நிர்ணயிக்கப்பட்ட 700 ரூபா அடிப்படை சம்பளம் மற்றும் 50 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக அரசாங்கத்தினால் வரவு செலவு திட்டத்தினூடாக 50 ரூபா கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த 4 மாதங்களுக்குரிய சம்பள நிலுவை கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 20 ரூபா சம்பள அதிகரிப்பே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொண்ட அமைச்சர், இதனால் அரசாங்கத்தினால் 50 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1000 ரூபா சம்பளத்தை கொடுக்க முடியாவிட்டால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 140 ரூபா மேலதிக கொடுப்பனவையாவது பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் இல்லையேல் அரசாங்கத்திலிருந்து விலகுவோம் எனவும் அமைச்சர்களான திகாம்பரம் , மனோகணேசன் உள்ளிட்டோர் கடந்த வாரங்களாக அறிவித்து வந்தனர்.

அமைச்சர்கள் நவீன் திசநாயக்க, ரவீந்திர சமரவீர ஆகியோருடன் தொழில் அமைச்சில் நேற்று நடந்த கலந்துரையாடலின் பின்னர், சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை வெற்றியளித்ததாக அமைச்சர் மனோ கணேசனும், பேச்சு வெற்றியளித்ததாக தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், 50 ரூபா கொடுப்பனவே வெற்றியென அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் நிலுவைக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதால் அரசாங்கம் கொடுக்கும் 50 ரூபா கொடுப்பனவு அர்த்தமற்றது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்