குருபெயர்ச்சி 2018 -2019: சிம்ம ராசியினரே உங்களுக்கு நடக்கப்போவது என்ன?

அன்பார்ந்த சிம்ம ராசி நேயர்களே!போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள், யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள். முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முன்னேறும் குணமுடைய நீங்கள் திடீரென்று முடிவெடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்துவிடுவீர்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்தாரே!

எந்த ஒரு வேலைகளையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்தாரே! எதை செய்தாலும் அதில் ஒரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தினாரே! தந்தையாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் கருத்து மோதல்களையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள்.

வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். தாயாருக்கு சின்னச் ச்சின்ன அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகு தண்டில் வலி வந்து போகும். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்கள் இலவசமாக தொற்ற வாய்ப்பிருக்கிறது. நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்னச் சின்ன அபராதம் செலுத்த வேண்டி வரும். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

குருபகவானின் பார்வை பலன்கள்
குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும்.

குரு உங்கள் உத்யோகஸ்தானத்தை பார்ப்பதால் சிலருக்கு புது வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்அஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும்.

பூர்வீக சொத்து கைக்கு வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சஷ்டமசப்தமாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிறர் மீது நம்பிக்கையின்மை, அசதி, சோர்வு, சுபச் செலவுகள் வந்து போகும்.திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.

வேலைச்சுமையால் மனைவி கோபப்படுவார். பழைய கசப்பான சம்பவங்களை மனைவியிடம் விவாதிக்காதீர்கள். அவரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை தனாதிபதியும் லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனஅழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். சில சமயங்களில் தனிமைப்படுத்தப் பட்டதைப் போல் உணர்வீர்கள்.

பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியை தவிர்ப்பது நல்லது.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
13.3.2019 முதல் 18.5.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 5ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். மகனுக்கு இருந்த கூடாபழக்க வழக்கங்கள் நீங்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் திருப்பம் உண்டாகும்.

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென்று நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக அறை அல்லது தளம் அமைப்பீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப்பாருங்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பர யுக்திகளை கையாளுங்கள்.

வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். கடையை வேறிடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். சிலர் நம்பிக்கையான பங்குதாரரை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

உத்யோகத்தில் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைத்த போதும் அதற்கு எவ்வித பாராட்டும் இல்லாமல் போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி இடமாற்றம் வரும். சில நேரங்களில் உங்களின் அடிப்படை உரிமைக்காகக் கூட போராட வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும்.

கன்னிப் பெண்களே!
கல்யாணம் கூடி வரும். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு. தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக பழகுங்கள்.

மாணவ மாணவிகளே!
தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில், கல்வி நிறுவனத்தில் சேர அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறையினரே!
உங்களின் கற்பனைத்திறன் வளரும். உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள்.

அரசியல்வாதிகளே!
கோஷ்டி பூசலாலும், உங்களைப் பற்றிய வதந்திகளாலும் உங்கள் புகழ் குறையும். சகாக்கள் மத்தியில் கட்சி மேல்மட்டத்தை விமர்சிக்க வேண்டாம்.

விவசாயிகளே!
மரப்பயிர் லாபம் தரும். பம்பு செட் அவ்வப்போது பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டையை பெரிதுபடுத்தாதீர்கள். இந்த குரு மாற்றம் உங்களை நாலாவிதத்திலும் சிரமப்பட வைத்தாலும், புதிய பாதையில் பயணித்து எதிர்நீச்சலில் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் குரு ஹோமம் பண்ணவும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்