ஜனாதிபதி பிரதமர் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் இடைநடுவில் வெளியேறிய மனோ!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் இடை நடுவில் வெளியேறினார்.

இச்சமயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமரசப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்த போதும் அது கைகூடியிருக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கும் போது; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.30க்கு கட்சித்தலைவர் கூட்டம் ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், அரசியலமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசும் போது, தேர்தலுக்கு முன் புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்க முடியாது என்ற பிரதமர் ரணில் கூறினார்.

நாடு முழுக்க புதிய பிரதேச சபைகள் அமைக்க வேண்டி கோரிக்கைகள் வந்துள்ளதால், அதை இப்போது செய்ய முடியாது என அவர் காரணம் கூறினார்.அப்போது இடைமறித்த நான், நாட்டின் ஏனைய இடங்களில் புதிய சபைகளை பிறகு உருவாக்கலாம். ஆனால், நுவரெலியா மாவட்டத்துக்கு விசேட கரிசனை வேண்டும். அங்கே ஒவ்வொன்றும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இரண்டு சபைகள் இப்போது உள்ளன. ஒன்று, நுவரேலியா பிரதேச சபை, அடுத்தது, அம்பகமுவ பிரதேச சபை.

நாட்டின் ஏனைய இடங்களில் பத்தாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது, நுவரேலியா மாவட்டத்தில், மட்டும் இப்படி இரண்டு லட்சம் பேருக்கு ஒரு சபை என்ற கணக்கில் நான்கு லட்சம் பேருக்கு இரண்டு சபைகள் இருப்பது மாபெரும் அநீதியாகும்.இது கடந்த முப்பது வருட காலமாக மலையக தமிழருக்கு மாத்திரம் இந்நாட்டில் இழக்கப்பட்டு வரும் அநீதி.

ஏனைய சபைகளை பிறகு பார்த்துக்கொள்வோம். நுவரேலியாவில் மட்டும் புதிய சபைகளை தேர்தலுக்கு முன் அமைத்து தருவோம் என எனக்கு நீங்கள் உறுதி அளித்திருந்தீர்கள். அதை இப்போது செய்யுங்கள்’ என பிரதமரிடம் நேரடியாகக் கூறினேன்.

என் நிலைப்பாட்டை அங்கு கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆதரித்தார். எனினும் இதுபற்றி முடிவெடுத்து மலையக தமிழருக்கு மட்டும் இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை துடைப்பதற்கு அந்த கூட்டத்தில் எவருக்கும் மனம் இல்லாததை உணர்ந்த பிறகும் அங்கே அமர்ந்து, தலையாட்டிக்கொண்டு இருக்க என்னால் முடியவில்லை. உடனடியாக இடைநடுவில் எழுந்து வந்து விட்டேன் என அமைச்சர் மனோ கணேசன் தமது வெளிநடப்பு குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்