உங்கள் குடல்வால் வெடிக்கப் போகிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

அப்பெண்டிக்ஸ் ஒரு சிறிய பை அளவிலான உறுப்பு. இது பெருங்குடலும், சிறுகுடலும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த குடல்வால் உறுப்பின் பணி என்னவென்று இதுவரை சரியாக தெரியவில்லை.ஆய்வுகளின் படி, குடல்வால் உடலில் தேவையில்லாத ஒரு உறுப்பும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் குடல்வால் உறுப்பு இல்லாமலேயே ஒருவரால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். உலகில் குடல்வால் உறுப்பில் ஏற்படும் தீவிரமான பிரச்சனையான குடல்வால் அழற்சியால் சுமார் 5 சதவீத மக்கள் அவஸ்தைப்படுகிறார்கள்.ஒருவரது குடல்வால் உறுப்பில் சளி, ஒட்டுண்ணிகள் அல்லது கழிவுகள் தேங்கி அடைப்பை உண்டாக்கினால், அந்த உறுப்பில் தீவிரமான அழற்சி ஏற்பட்டு, சில சமயங்களில் அழற்சியின் தீவிரத்தால் குடல்வால் வெடித்து உயிரையே இழக்க நேரிடும். எனவே தான் குடல்வால் உறுப்பில் பிரச்சனை இருந்தால் உடனே அதை கவனித்து சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.இப்போது குடல்வால் உறுப்பில் தீவிரமான அழற்சி ஏற்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று காண்போம். இந்த அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அடிவயிற்றின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. எனவே குடல்வால் அழற்சி ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால் அடிவயிறு மட்டுமின்றி, தொப்புள் சுற்றியுள்ள பகுதியில் வலி மற்றும் மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும். குறிப்பாக நடக்கும் போது, கால்கள் அல்லது அடிவயிற்றை அசைக்கும் போது, சிரிக்கும் போது, இருமலின் போது, தும்மலின் போது என எது செய்தாலும் வலியை அனுபவிக்கக்கூடும்.குடல்வால் அழற்சி தீவிரமாக இருப்பின், வலியானது அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதுவும் ஒருவர் எவ்வளவு தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும், குடல்வால் அழற்சி தீவிரமாக இருந்தால், அது உண்டாக்கும் வலியால் எழுந்துவிடுவர். அந்த அளவில் வலி மிகவும் கடுமையாக இருக்கும்.குடல்வால் அழற்சியின் மற்றொரு முக்கிய அறிகுறி, காய்ச்சலுடன், உடல் நடுக்கத்தை சந்திப்பது. இம்மாதிரியான அறிகுறி மற்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் இருப்பதால், பலர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர். ஆனால் கடுமையான வயிற்று வலியுடன், காய்ச்சல், உடல் நடுக்கம் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.பொதுவாக வயிற்றில் தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால், குமட்டல், வாந்தி ஏற்படுவது சாதாரணம். ஆனால் ஒருவர் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வாந்தி எடுத்து வந்து, தீவிரமான அடிவயிற்று வலியை உணர்ந்தால், உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஏனெனில் இது தீவிர குடல்வால் அழற்சியின் அறிகுறிகளுள் ஒன்று.தீவிரமான அடிவயிற்று வலியுடன், பசியின்மை ஏற்பட்டால், அது குடல்வால் அழற்சியின் அறிகுறியின் முக்கியமான அறிகுறியாகும். இம்மாதிரியான தருணத்தில் சற்றும் யோசிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.வயிற்று வலி மற்றும் இதர அறிகுறிகளுடன், உங்களால் தெளிவான மனநிலையில் இருக்க முடியவில்லையா? எப்போதும் குழப்பமான மனநிலையிலேயே இருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் குடல்வாலில் தொற்று மிகவும் தீவிரமாக உள்ளது என்று அர்த்தம்.நீங்கள் 2-3 நாட்களாக தீவிரமான அடிவயிற்று வலியுடன் வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கலை சந்தித்தால், உங்களுக்கு குடல்வால் அழற்சி ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இது இப்படியே நீடித்தால், பின் குடல்வால் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இம்மாதிரியான நேரத்தில் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்.உங்கள் வயிறு 8 மணிநேரத்திற்கும் மேலாக உப்புசத்துடன் இருந்து, மிகுந்த துர்நாற்றத்துடன் வாய்வு வெளியேற்றுவதே மிகவும் சிரமமாக இருந்தால், உங்கள் குடல்வாலில் அழற்சி ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அதோடு மலம் கழிக்கும் போது அடிவயிற்றுப் பகுதியில் தாங்க முடியாத வலியையும் சந்திக்கக்கூடும்.அடிவயிற்றின் வலது பக்கத்தில் தொட்டாலோ அல்லது அழுத்தினாலோ வலியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் குடல்வால் பகுதியில் கடுமையான அழற்சி ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இப்படியான வலியை சந்திக்கும் போது, அடிக்கடி வயிற்றை அழுத்த வேண்டாம். இல்லாவிட்டால் குடல்வால் வெடித்துவிடும்.குடல்வால் அழற்சி என்பது ஒரு தொற்று. இந்த நேரத்தில் இரத்த பரிசோதனை செய்தால், இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அசாதாரண அளவில் இருக்கும். ஒருவரது உடலில் இரத்த வெள்ளையணுக்கள் அளவுக்கு அதிகமாக இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் உடலில் ஏற்பட்டுள்ள தீவிரமான தொற்றை எதிர்த்துப் போராட முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்