பெருமளவான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் பிரகடன நிகழ்வு..!

பொங்குதமிழ் பிரகடனத்தின் 19 ஆம் ஆண்டு நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (17) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 2001 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் நடாத்தப்பட்டது.இதன் போது தமிழ் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமென பிரகடனம் நிறைவேற்றப்பட்டிருந்தது.இந் நிலையில், அந்த பிரகடனத்தின் 19 வது ஆண்டான இன்று அந்த பிரகடனம் நிறைவேற்றப்பட வேண்டுமென மாணவர்களால் மீள வலியுறுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக துறைசார் தரப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இது தொடர்பான அறிக்கையில்,

ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்துக்கான அடிப்படை அபிலாசைகளையும் நியாயங்களையும் சர்வதேசத்துக்கு ஒரே குரலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய தளமாக பொங்கு தமிழ் அமைந்தது.
இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த தமிழரின் மரபுவழித் தாயகமும், அதனால் சிதைக்கப்பட்டிருக்கும் தன்னாட்சி உரிமையையும் வேண்டிநின்ற தமிழ் மக்கள், தமிழ் தேசியத்தின்பால் தாம் கொண்டுள்ள ஆழமான விடுதலை உணர்வை வெளிக்கொணர்வதற்கும், வலியுறுத்துவதற்குமாக 2001.01.17இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட நிகழ்வே ‘பொங்கு தமிழ்’ ஆகும்.

இதனைத் தொடர்ந்து, ஈழத்தின் அனைத்து மாவட்டங்களிலும், புகலிட தேசங்களிலும் பொங்கு தமிழாய் எம் மக்கள் விடுதலைக்காய் பேரெழுச்சி கொண்டனர்.அப்போது யாழ். மண்ணில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் அடக்குமுறைகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், வீதி மறிப்புக்களையும், கெடுபிடியான சோதனை நடவடிக்கைகளையும் தாண்டி, குடியிருப்புக்களின் மதில்களினால் பாய்ந்தும், குறுக்கு பாதைகளினாலும் இளைஞர்கள், முதியவர்கள், மதகுருமார், பெண்கள், மாணவிகள் என்ற பாகுபாடின்றி திரண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுடன் பேரெழுச்சி கொண்டு பொங்கிப் பிரவாகித்து நின்றது 2001ஆம் ஆண்டு பொங்குதமிழ்.

இலங்கை அரசாங்கத்தின் கொடுமைகளுக்கு எதிராகவும் தமிழ் தேசத்தின் திட்டமிட்ட அழிப்பிற்கு எதிராகவும் அவற்றைத் தகர்த்தெறிந்து எழுச்சி கொண்டு தமிழ் மக்கள் தமது உரிமைக் குரலை உயர்த்தி வெளிப்படுத்திய எழுச்சி மிக்க பிரகடனமே பொங்கு தமிழாகும்.இந்நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றது. எனினும் எம்மினம் இன்னமும் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்குள் சிக்குண்டு எமது தேசத்தின் தாங்குதூண்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இவ்வழிப்பு தொடர்வதனை நாம் அனுமதிக்க முடியாது. இந்நாளில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் எமது பல்கலைக்கழகம் கடந்தகாலத்தில் மேற்கொண்ட வரலாற்றுக் கடைமையை ஜனநாயக வழியில் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் உறுதியெடுக்கின்றோம்.இப்புனித நாளில் இலங்கை அரசினால் கடந்த ஆட்சியில் தாயாரிக்கப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒற்றையாட்சிக்கான இடைக்கால அறிக்கையை நிராகரித்து எமது தேசத்தின் இருப்பைப் பாதுகாக்க பின்வரும் தீர்மானங்களை வலியுறுத்துகின்றோம்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகம் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.தமிழரின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.தமிழ் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.மேற்படி கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இவ்வாண்டு இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை இப்பல்கலைக்ககழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்