மணல் கொள்ளையர்களிடமிருந்து எங்கள் கிராமத்தைக் காப்பாற்றுங்கள்… வீதியில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்…!

சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் ஏ9 வீதியை மறித்து இன்று (14) போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சியின் பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி, கோவில் வயல் மக்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்கச்சி சந்தியில் ஒன்று திரண்ட மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஏ9 வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸ் நிலைய பொலிசார், மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இயக்கச்சி, கோவில் வயல் என்பன ஆனையிறவு நீரேரி, சுண்டிக்குளம் நீரேரிக்கு இடையில் அமைந்துள்ள ஒடுங்கிய தாழ் நிலப்பரப்பு என்றும், தற்போது மேற்கொள்ளப்படும் துரித மண் அகழ்வால் கிராமம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.அத்துடன், முள்ளியான் மண்டலாய் வாய்க்காலும், அதை அண்டிய மணல் மேடும் பிரதேசத்தின் வெள்ள அனர்த்தத்தை குறைத்து வந்ததாகவும், அந்த பகுதியும் மணல் கொள்ளையர்களால் திருடப்படுவதால் தமது கிராமங்கள் அழிவடையும் சூழல் உருவாகுவதாக மக்கள் தெரிவித்தனர்.இந்த விடயத்தில் உடனடியாக கவனமெடுப்பதாகவும், மணல் கொள்ளையர்கள் பயன்படுத்தும் வீதிகளில் காவல் கடமையில் பொலிசாரை நிறுத்துவதாகவும்,பொலிசார் தெரிவித்தனர்.அத்துடன், பொலிசாரின் காவல் கடமைக்கு பிரதேச மக்களும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவதென முடிவானது.இதையடுத்து மக்கள் கலைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்