அமெரிக்காவிற்கே சிம்ம சொப்பனமாக திகழும் வட கொரிய ஜனாதிபதி கிம் இன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….. ?

உலக நாடுகளை தன்னுடைய அணு ஆயுத சோதனை மூலம் மிரட்டி வந்த வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் திடீரென்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், தங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விடுவதாகவும் தெரிவித்தார்.கிம்மின் இந்த திடீர் மனமாற்றத்தால் உலக நாடுகள் பெரும் வியப்பில் இருந்தன. இதைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் சந்தித்து பேசிக் கொண்டனர்.இவர்களின் இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சொத்து மதிப்பும், அவருக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.கிம் ஜாங் உன் கடந்த 1984-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் திகதி பிறந்தார்.

34 வயதான கிம் கடந்த 2011-ஆம் ஆண்டு வடகொரியாவின் ஜனாதிபதியானார்.இதுவரை 84-க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டுள்ள கிம் ஜாங்கின் வாழ்க்கை பற்றிய தகவல்கள் இன்றளவும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும்  The Squander என்ற இணையதளம் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த தகவல்கள் மற்றும் கிம் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரின் சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது 2018-ஆம் ஆண்டு கிம்மின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 8 பில்லியன் பவுண்ட் வரை இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.இதில், பாதியை கிம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளது.

அதாவது தந்தம் கடத்துதல், போதைப்பொருள் கடத்தல் போன்றவைகள் மூலம் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளது.இதனால் உலகில் உள்ள பல நாடுகளில் கிம்மிற்கு வங்கி கணக்குகள் இருப்பதாகவும், குறிப்பாக ஐரோப்பா, ஆசியா போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் உள்ளது.கிம் தன்னுடைய பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்கிறார் என்பதை பிரபல கூடைப்பந்து வீரர் Dennis Rodman கூறியுள்ளார்.கிம் ஆண்டிற்கு சுமார் 440 மில்லியன் பவுண்ட்டை செலவு செய்கிறார். அதில் 22 மில்லியன் பவுண்ட் மதுபானம் குடிப்பதற்கே செலவு செய்து வருகிறார்.

5 மில்லியன் மதிப்பு கொண்ட கப்பல். குண்டு துளைக்காத Mercedes கார்கள் மற்றும் பனிச்சறுக்கு ரிசார்ட் வைத்துள்ளார்.ரிசார்ட்டிற்கு மட்டும் £25 மில்லியன் பவுண்ட் செலவு செய்துள்ளதாகவும், அந்த பனிச்சறுக்கு ரிசார்ட் சுமார் 70 மைல் கொண்டது எனவும் கூறப்படுகிறது.கிம்மிற்கு உணவு என்றால் அவ்வளவு பிடிக்கும், மாட்டு கறியின் மீது அதிக விருப்பம் கொண்ட இவருக்கு ஜப்பானில் இருந்து மாடுகள் இறக்கப்படுகிறதாம்.பல சொகுசு வீடுகளை கொண்டுள்ள இவருக்கு முக்கியமான வீடு என்றால் வடகொரியாவின் Pyongyang பகுதியில் உள்ள சொகுசு வீடு தானாம். அந்த வீட்டில் 1000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு சினிமா தியேட்டர் உள்ளதாகவும், 7 மில்லியன் பவுண்ட் கொண்ட கைக்கடிகாரங்கள் அவரிடம் உள்ளது எனவும் கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இப்படி கிம் ஜாங் உன் ராஜா வாழ்க்கை வாழ்ந்தாலும், வடகொரிய மக்கள் பெரும்பாலானோர் வறுமையில் தான் வாழ்ந்து வருவதாகவும், காரணம் வடகொரியா மேற்கொண்ட தொடர் அணு ஆயுத சோதனைகளால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் உட்பட பல தடைகள் விதிக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது.மேலும், கிம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முக்கிய காரணமே இந்த தடைகள் தான் எனவும், தடைகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவே கிம் தன்னுடைய பிடிவாத குணத்தை விட்டுக் கொடுத்துள்ளதாகவும் தலைவர்கள் பலர் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்