மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம் பற்றி நீங்கள் அறிந்திராத சில உண்மைகள்

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று. இதுதென்மராட்சி பெருநிலப் பரப்பில் சாவகச்சேரி-புத்தூர் வீதியில் மட்டுவில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.இந்த ஆலயம் வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரமும், புளியமரமும் ஓங்கி வளர்ந்த பகுதியில் அமைந்துள்ளது.

அம்பாளின் ஆலயம் 1750 ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன.

ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அங்கு பொங்கல் பொங்கி அம்பாளிளுக்கு நிவேதித்து வரும் அடியவர்களிற்கும் வழங்கி இஷ்ட சித்திகளைப் பெறுவர். முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வ்ந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.

காரணப் பெயர்

இவ் ஆலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத் தொழிலையும் செய்து வந்தான். அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான். நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச் சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக் கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான். அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக் கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை “”நாளைய தினம் பன்றி எச்சங்களை புதைத்தேன் என்று கூறு என்று அருள்புரிந்தாள். என்ன அதிசயம்! அடுத்த நாள் மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலை காணப்பட்டது. அதைக் கண்ட பக்தன் ஆடிப் பாடி கைகூப்பி, மெய்சிலிர்க்க, கண்ணீர் மல்க, வாய் குழறியபடி பன்றித் தலைச்சி என்று பக்தியோடு பல முறை பணிந்தான்.

தனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தாற் போலும் அன்னையைப் பற்றிப் பேசும் போது “கிழவி’ எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள்.அமைவிடம்

தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி நகரில் இருந்து புத்தூர் வீதியில் சுமார் 3 மைல் தொலைவில் உள்ள தொன்மை வாய்ந்த கிராமங்களில் ஒன்றான மட்டுவிலில் இக்கோவில் அமைந்துள்ளது.

ஆலய வளர்ச்சி

இன்று நாம் காணும் இடத்தில் இந்த ஆலயம் கி. பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வைரக் கற்களை (வெள்ளைக் கற்கள்) கொண்டு கட்டப் பெற்றதை நாம் அறிய முடிகிறது. 1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக கும்பாபிஷகம் செய்யப்பட்டதுடன் அதே ஆண்டு மார்கழித் திருவெம்பாவையில் கொடியேற்றத் திருவிழாவும் முதன் முதலாக இடம்பெற்றன. 1952 இல் இருந்து ஆறுகால நித்திய பூசை நடைமுறைக்கு வந்தது.திருவெம்பாவைக் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பூஜை நடைபெறும்.
நித்திய பூசை ஆயத்தமணி 5.30 1. உஷத் காலம் 6 மணி 2. கால சந்தி 9 மணி 3. உச்சி காலம் 12 மணி 4. சாயரட்சை 3 மணி 5. இரண்டாம் காலம் 4 மணி 6. அர்த்தசாமம் 5 மணிபன்றித்தலைச்சி என்ற சொற்றொடரோடு பங்குனித் திங்களும் சேர்ந்து வரும்.

யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே நீவேதித்து வணங்குவார்கள். பொங்கற் தலமாகவும், தீர்த்த சிறப்பும், முர்த்திப் பெருமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்