இர்மாவில் ‘இருண்டு’ மெல்ல மெல்ல மீண்டு வரும் புளோரிடா!

கரீபியன் தீவுகளை சூறையாடிய இர்மா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏற்படுத்திய பொருள் சேதம் மிக அதிகம். அதுமட்டுமல்லாமல் இந்தக் கோரப் புயல் 22 உயிர்களை பறித்துச் சென்றுள்ளது.

புரட்டி எடுத்து விட்ட இர்மா:

புயலின் பாதிப்பிலிருந்து மக்கள் மெதுவாக மீண்டு வருகின்றனர். புளோரிடா மக்கள் தொகையில் கால் பகுதி இதன் காரணமாக பத்திரமான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

அந்த மாகாண அரசே ஏற்பாடுகளை செய்து மக்களை வெளியேற அறிவுறுத்தி பெரும் உயிர் சேதத்தை தவிர்த்தது. அதையும் மீறி இதுவரை அங்கு 22 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

புளோரிடாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த இர்மா புயலால் பெரும் மின்தடை ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை நாள் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் தவித்துப் போய் விட்டனர்.

மீண்டும் வந்த ‘பவர்’ :

இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து மக்கள் மின் இணைப்பை திரும்ப பெற்றுள்ளனர். இதுவரை 20.3 லட்சம் நுகர்வோருக்கு மட்டுமே மின் இணைப்பு திரும்ப வந்துள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களில் வெறும் 40 சதவிகிதம் மட்டுமே.

செவ்வாய் நிலவரப்படி செவ்வாய் மாலை நிலவரப்படி இன்னும் 40.4 லட்சம் பேர் இருளில்தான் உள்ளனர். இவர்களுக்குப் படிப்படியாக இணைப்புகள் சரி செய்யப்படும் என புளோரிடா மின் இணைப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உணவுப் பிரச்சனை:

இங்கு எல்லா வீடுகளிலும் மின்சார அடுப்புகள் மட்டுமே பயன்படுத்துவதால் மக்கள் சமைக்க வழியற்று பிரட், நொறுக்குத் தீனி, பழங்கள் என கையில் கிடைத்ததையும், ஏற்கனவே முன் எச்சரிக்கையாக தயாரித்து வைத்த உணவுகளையும் உண்டு சமாளித்துள்ளனர்.

புளோரிடா வருகிறார் டிரம்ப்:

இதற்கிடையே, அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமையன்று புளோரிடா பாதிப்புகளை பார்வையிட வருவதாக தெரிவித்துள்ளார். விரைவில் புளோரிடா இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க மக்கள் இருக்கின்றனர்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்