பாபர் அசாமின் அதிரடியினால் உலக லெவன் அணிக்கெதிரான முதலாவது ரி-20ல் பாகிஸ்தானுக்கு அசத்தல் வெற்றி

மூன்று டி20 போட்டிகளை கொண்ட பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான சுதந்திர கிண்ண போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் பாபர் அசாமின் அதிரடி ஆட்டத்தின் முலம் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டி 1-0 அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

லாகூர், கடாபி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 9,000 மேற்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவ படையினரது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உலக பதினொருவர் அணித் தலைவர் டூப் பிளெஸ்ஸிஸ் முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தார்.

அந்த வகையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதலாவது ஓவரிலேயே மோர்னே மோர்க்களின் நேர்த்தியான பந்து வீச்சில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்கர் சாமான் எட்டு ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இழந்தது.

எனினும், அதனையடுத்து களமிறங்கிய பாபர் அசாம், அகமத் ஷாசேத்துடன் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்காக 81 பந்துகளில் 122 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்ட அதேவேளை பாகிஸ்தான் அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.

அதிரடியாக துடுப்பாடிய பாபர் அசாம் 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸ்சர்கள் உட்பட 86 ஓட்டங்களை விளாசினார்.இதன் முலம் தனது வாழ்நாள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் கூடிய ஓட்ட எண்ணிக்கையையும் பதிவு செய்தார்.

அதேநேரம் அகமத் ஷாசேத் மற்றும் முத்த வீரர் சொஹிப் மாலிக் முறையே 38, 39 ஓட்டங்களை பதிவு செய்தனர்.சொஹிப் மாலிக் மற்றும் இமாத் வசிம் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் இறுதி மூன்று ஓவர்களுக்குள் 48 ஓட்டங்களை விளாசியதோடு உலக பதினொருவர் அணிக்கு 197 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
உலக பதினொருவர் அணி சார்பாக திசர பெரேரா 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனையடுத்து இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய உலக பதினொருவர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.ரம்மான் ரைஸ், ஷாத் கான் மற்றும் சோஹைல் கான் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக பாபர் அசாம் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாம் டி20 போட்டி இன்று மாலை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்