வித்தியா கொலை வழக்கில் கைதான முன்னாள் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க பிணையில் விடுதலை!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர் ஒருவரை தப்பித்து செல்ல உதவி செய்தார் என குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவிற்கு பிணை வழங்கி யாழ் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான சுவிஸ் குமார் தப்பித்து செல்ல உதவி செய்த குற்றச்சாட்டில் சென்ற ஜுலை மாதம் 15 ஆம் திகதி பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரது விளக்க மறியல் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான, நான்கு ஆட்பிணைகளிலும் அவரை நீதிமன்றம் இன்று விடுவித்தது.

அத்துடன் அவரது கடவுச் சீட்டை முடக்கவும் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவர் ஒவ்வொரு திங்கட் கிழமைகளிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவரது வழக்கு குறித்த மேலதிக விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்